Latest Posts

Thursday, June 13, 2019

வரணி தேரிழுப்பு நிறுத்தம் : யாருக்கும் வெட்கமில்லை ‘102 ஆலயங்களில்  தலித் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன’

வரணி தேரிழுப்பு நிறுத்தம் : யாருக்கும் வெட்கமில்லை ‘102 ஆலயங்களில் தலித் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன’

யாழ்-வரணி என்பதைவிட JCB மெஷின் புகழ் வரணி வடக்கு கண்ணகி அம்மன் ஆலையம் என்று சொன்னால் எல்லோருக்கும் புரியும். ஆம் கடந்த ஆண்டு அந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெற்ற போது அந்த பிரதேசத்தில் குறித்த ஒரு சமூக பிரிவினருக்கு மட்டுமே உரிமையாக இருந்துவந்த தேரிழுக்கும் உரிமைக்கு சோதனை வந்தது. 



அந்த  சாதியின் பெயரால் 'தகுதி' படைத்திருந்தவர்களுக்கு தேரிழுக்கும் அளவுக்கு ஆளணி வலிமை இருக்கவில்லை. அதன் காரணமாக தலித் மக்களையும்  இணைத்து அந்த தேரை இழுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இந்த நிர்ப்பந்தத்தை   தவிர்ப்பதற்காக JCB மெசினை கொண்டுவந்து அத்தேரினை இழுத்தனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தினையும் தாண்டி வரணி ஆலய நிர்வாகத்தினரது ஆதிக்க சாதி மனோபாவம்   பலத்த கண்டனங்களுக்கு உள்ளாக நேரிட்டது.

மீண்டும் இவ்வாண்டு குறித்த வரணி வடக்கு அம்மன் ஆலய திருவிழா அண்மித்தபோது இந்த வருட தேரிழுப்பை எப்படி நடத்துவது என்பதில் அந்த ஆலயத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற  ஆதிக்க சாதியினர் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. 

தலித் மக்கள் சார்பில் வடம் பிடித்து தேர் இழுப்பதற்கான உரிமை கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து இம்முறை ஆலய திருவிழாவை நடத்துவதில்லை என்கின்ற முடிவினை ஆலய நிர்வாகத்தினர் எடுத்துள்ளனர்.

இதன்காரணமாக வரணி ஆலயத்தை திருவிழாவுக்காக திறக்க வேண்டியும் அதில் அப்பிரதேச தலித் மக்களுக்கு சமத்துவ அந்தஸ்து கோரியும் சத்தியாக்கிரகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் ஒருவாரகாலமாக அவர்களுடைய  சத்தியாகிரகத்தில் இணைந்து பங்கெடுத்து வருகின்றனர்.

சாதி ஒடுக்குமுறையில் எவ்வித தளர்வுகளையும் ஏற்படுத்த தயாரில்லாத நிலையிலேயே யாழ்ப்பாண சமூக கட்டமைப்பு இன்றுவரை இயங்கிவருகின்றது என்பதற்கு இந்நிகழ்வு ஒன்றே போதுமான சாட்சியாகும்.

அதனை உறுதிப்படுத்தும் முகமாக  யாழ்-தென்மாராட்சி, பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய மூன்று பிரதேச செயலகபிரிவுகளில் மட்டும் 102ஆலயங்களில்  இதேபோன்று  தலித் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றமை பற்றிய   தகவல்கள் வெளிவந்துள்ளன. 

தலித்  மக்கள் சார்பான ஒரு அமைப்பினர் அந்த தகவல்களை திரட்டி இந்து கலாசார அமைச்சுக்கு நீதிகோரி அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றினை வன்னியில் வாழும் சுயாதீன ஊடகவியலாளர் “தமிழ் செல்வன்” தனது முகநூலில் அண்மையில் பதிவிட்டிருந்தார். 

அதனடிப்படையில் வடமாகாணத்தில் காணப்படும் 38பிரதேச செயலகங்களிலும் இதுகுறித்த தகவல்கள்  சேகரிக்கப்பட்டால் பல அதிர்ச்சிதரும் புள்ளிவிபரங்கள் கிடைக்கலாம்.

இவை ஒருபுறமிருக்க தமிழீழ போராட்ட காலத்தில்  தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசியமாகி விட்டனர், சாதி  ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சிலர் கருத்துரைத்தபோது அண்மையில் காலமான எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் "இல்லை சாதியானது குளிரூட்டிக்குள் வைத்த கோழி மாதிரி பாதுகாப்பாக உள்ளது. தேவையானபோது அது வெளியே வரும்" என்று சொன்னார். அவரது எதிர்வுகூறல் இன்று நிதர்சனமாகி உள்ளது.

இந்நிலையில்தான் தமிழ் சமூகமும் சாதியும் என்பது குறித்த புரிதல்களை நோக்கி நாம் சிந்தனையை தூண்டவேண்டியுள்ளது. இப்படியே எம்மினத்தின் ஒரு பகுதியினரை "தாழ்த்தப்பட்டவர்கள்", "கீழ்ச்சாதிகள்", என்று ஒதுக்கிவைத்துக்கொண்டே கட்டுப்பெட்டித்தனமாக வாழப்போகின்றோமா?  அல்லது சாதிய வேறுபாடுகள் என்பன பழமைவாய்ந்த சிந்தனைகள், சமூக முன்னேற்றத்துக்கும், நவீன உலகு நோக்கிய  பயணத்துக்கும் தடையான பழக்கவழக்கங்கள் என்று இவற்றை விட்டொழிக்கப்போகின்றோமா? 

இப்பத்தியை படிப்பவர்கள் கிழக்கு மாகாணத்தில் இப்படி சாதியில்லை, நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று முணுமுணுக்க கூடும், அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால் இங்கே கிழக்கு மாகாணத்தில் சாதி இல்லாமல் இல்லை. இருக்கின்றது. 

ஆனால் யாழ்ப்பாணத்தைப் போன்ற தீண்டாமை கொடுமைகள்  ஒப்பீட்டளவில் கிழக்கில் குறைவானவை எனலாம். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை  தனியொரு கட்டுரையாக அலசப்பட வேண்டியவையாகும்.

யாழ்ப்பாணமே இன்றுவரை ஈழத்  தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழ்கின்றது. யாழ்ப்பாண தலைமைகளே  தமிழர்களின் அரசியல் பாதையை தீர்மானிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின்  சிந்தனை முறையே தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை வடிவமைக்கின்றது.’ 

என்கின்றபோது இவையனைத்திலும் இந்த சாதிய சிந்தனையும்  கலந்துதானே இருக்கும். ஆம் அதனாற்தான்  இந்தச் சாதிய சமூகம் பற்றிய மேலதிக புரிதல்களை  நோக்கி நாமும் நகரவேண்டும். அதுபற்றி நாமும் பேசியாக வேண்டும் என்கின்ற தேவையெழுகின்றது.

சாதிய வேறுபாடுகளை காரணமாக கொண்டு,  சமூகத்தின் ஒரு பகுதியினர் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படுவதும், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் குற்றமாகும் என   1971ஆம் ஆண்டு இலங்கையின் சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம்   வலியுறுத்துகின்றது. ஆனால் நாமோ மரபுகளின் பெயராலும் கலாசாரத்தின் பெயராலும் கடவுள்களின் பெயராலும் அதனை காப்பாற்றி வருகின்றோம். 

குறிப்பாக இந்த ஆலயங்களில் காட்டப்படும்  சாதி வேறுபாடுகளுக்கு நம்மவர்கள் சொல்லுகின்ற விளக்கம் ஒன்று உண்டு. அதாவது "அது  எமது முன்னோர்கள் காலத்திலிருந்து நீண்டகாலமாக தொடருகின்ற பண்பாடு அதனை எப்படி மாற்றுவது?" என்கின்ற முணுமுணுப்புகளை  நாம் அடிக்கடி கேட்க நேர்ந்திருக்கும். 

சிலவேளைகளில் அது நியாயமான கேள்வியாகவே எமக்கு தோன்றியுமிருக்கும். ஆகவே அதற்கு மறுத்துரைப்பது கூட எம்மால் முடியாதிருந்திருக்கும். ஆனால் எமது முன்னோர்களெல்லாம் கோமணத்துடன் திரிந்தவாறே நாமும் இன்று திரிகின்றோமா?அல்லது எமது மூதாதையர் காட்டுமிராண்டிகளாக அம்மணமாக திரிந்ததுபோல் எம்மால் இன்றும் வாழமுடியுமா? என்று நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். 

"நிகரென்று கொட்டுமுரசே இந்த நீணிலம் வாழ்பவரேல்லாம்
தகரென்று கொட்டுமுரசே பொய்மை சாதி வகுப்பினையெல்லாம்" 

என்று பாரதி பாடி நூறு  வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் பாரதியை பிடிக்கும். பலரது வீட்டு சுவர்களை இன்றும் பாரதியின் படங்கள் அலங்கரிக்கும். எல்லா பாடசாலைகளிலும் பாரதி இல்லங்கள் இருக்கும், ஒவ்வொரு வினோத உடை போட்டியிலும் எமது குழந்தைகளை பாரதியாக அலங்கரித்து நடிக்கவைத்து நாமும் பூரித்து நிற்போம், ஆனால் சாதிகள் இருக்கவேணும் பாப்பா என்றுதான் காலம்காலமாக இந்த சாதியை கட்டிக்காத்துவருகின்றோம். 

இல்லாவிட்டால்  இன்று எதற்கு வரணியில் தலித் மக்கள் சத்தியாக்கிரகம் இருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது? ஆம் இந்த சாதியை கட்டிக்காப்பது குறித்து நம்மில் யாருக்கும் வெட்கமில்லை. 

நன்றி
-அரங்கம் செய்திகள்